Thursday 12 October 2017

16. திருவரங்கம் (பிரபந்தம் 1)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாய்பாடு:
விளம் மா காய்
..மா மா காய்

இருநதி களுக்கு நடுவினிலே
..இனிதாய்ப் பள்ளி கொண்டோனே!
திருவடி நிழலை அடைவோர்க்குச்
..சிறந்த பேற்றைத் தருவோனே!
கருநிற மேனி உடையோனே!
..கருணைக் கடலே! பணிவோர்மேல்
அருளினை வாரிப் பொழிவாயே!
..அரங்கத் துறையும் அம்மானே! 1

இருநதி - காவிரி, கொள்ளிடம்.
அம்மானே - அம்மான் (பெரியோன்) என்பதன் விளி.

நாலிரண் டெழுத்தால் நாமேத்த
..நலங்கள் யாவும் தருவோனே!
பாலக னே!பண் ணிசைபோற்றும்
..பவளச் செவ்வாய் உடையோனே!
வாலியை வென்ற வல்லவனே!
..மறையைக் காக்கும் மன்னவனே!
ஆலிலை மேலே துயில்வோனே!
..அரங்கத் துறையும் அம்மானே! 2

வானவர் கோவின் அகந்தையினை
..மலையைத் தூக்கி அழித்தவனே!
தானவர் பலரைச் சாய்த்தவனே
..தாபம் தீர்க்கும் அருளாளா!
தேனினும் இனிய குழலதனைத்
..தினமும் இசைத்துக் கவர்வோனே!
ஆனிரை மேய்க்கும் அழகோனே!
..அரங்கத் துறையும் அம்மானே! 3

வானவர் கோ - இந்திரன் (கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்த வைபவம்)

சகடனை உதைத்த கழலோனே!
..சபரிக் கருள்செய் பெருந்தகையே!
பகலவன் முதலோர் பணிந்தேத்தும்
..பச்சை வண்ணப் பெருமாளே!
இகபரம் தனிலே இன்பங்கள்
..என்றும் அருளும் இன்னமுதே!
அகலிகை சாபம் தீர்த்தோனே!
..அரங்கத் துறையும் அம்மானே! 4

சகடன் - சகடாசுரன்
பகலவன் - சூரியன்

உலகினைக் காக்கும் திருமாலே!
..ஒப்பில் லாத பெரியோனே!
சலனமென் றேதும் இல்லாத
..தலைவா! அடியார்க் கருள்வாயே!
நிலமகள் அவளைக் காத்தோனே!
..நேமி தன்னை உடையோனே!
அலைகடல் தனிலே துயில்கொண்ட
..அரங்கத் துறையும் அம்மானே! 5

நிலமகள் - பூமா தேவி

வையகம் தழைத்து வளர்வதற்கு
..வரங்கள் வாரிப் பொழிவோனே!
பையர வம்மேல் துயில்வோனே
..பத்தர் சொல்லில் மகிழ்வோனே!
மையுரு மேனி கொண்டோனே!
..வைகுந் தத்தில் வசிப்போனே!
ஐவரைக் காத்த அருளாளா!
..அரங்கத் துறையும் அம்மானே. 6

ஐவர் - பாண்டவர்கள்

வீடணன் வைத்த திருவுருவே!
..விண்ணோர் ஏத்தும் உத்தமனே!
கேடறுத் தருளும் கேசவனே!
..கீதம் கேட்டு மகிழ்வோனே!
ஈடிணை யற்ற அழகோனே!
..என்றும் நிலையாய் இருப்போனே!
ஆடர வின்மேல் துயில்கொண்ட
..அரங்கத் துறையும் அம்மானே! 7

வாரணம் அழைக்க வந்தோனே!
..மாசில் லாத மாதவனே!
ஈரடி யாலே மூவுலகை
..எளிதாய் அளந்த பெருமானே!
காரணப் பொருளாய் இருப்பவனே!
..கண்ணால் உலகை ஆள்பவனே!
ஆரமு தே!யென் னருமருந்தே!
..அரங்கத் துறையும் அம்மானே! 8

கொண்டலின் வண்ணம் கொண்டோனே!
..கோதை அவளை மணந்தோனே!
எண்டிசை யோரும் பணிந்தேத்தும்
..எழிலே! என்றன் ஆருயிரே!
வண்டுகள் மொய்க்கும் தேமலரை
..மனத்தால் விரும்பி ஏற்போனே!
அண்டம தாளும் ஆண்டவனே!
..அரங்கத் துறையும் அம்மானே! 9

வேயமு தே!வல் வினையறுப்போய்!
..வேதம் போற்றும் வேங்கடவா!
மாயவ னே!மல் லரைமாய்த்தோய்!
..மண்ணை உண்ட மணிவண்ணா!
தூயவ னே!திண் தோளுடையோய்!
..துயரைப் போக்கும் தூமணியே!
ஆயிரம் நாமம் கொண்டோனே!
..அரங்கத் துறையும் அம்மானே! 10

எனது தோழி ருக்மணி, இந்தத் திருவரங்கப் பதிகத்தில், கம்ப ராமாயணம் மற்றும் அருணாசல கவிராயரின் இராம நாடக கீர்த்தனைகள் ஆகியவை இத்தலத்தில் அரங்கேறியதைப் பற்றி சேர்க்க முடியுமா என்று கேட்டிருந்தார்.

அரங்கனின் அருளால் ஒரு பாடல் அதே வாய்பாட்டில் அமைந்து வந்துள்ளது. அவர் கேட்ட ஒரு பத்து நிமிடங்களில் திருமால் பாடலாக வந்து அமர்ந்தார். இன்று நிறைவுப் பாடலாய் அந்த வரிகளை இடுகிறேன்.

கம்பரின் இராமா யணந்தன்னைக்
..களிப்பாய்க் கேட்ட நரசிங்கா!
வம்பலர் மாலை களைவிரும்பி
..மார்பில் அணியும் மணிவண்ணா!
கம்பொடு நேமி யினையுடையாய்!
..கவிரா யருக்கன் றருள்செய்தோய்!
அம்புய நாபா! அருளாழீ!
..அரங்கத் துறையும் அம்மானே! 11

கம்ப ராமாயண அறங்கேற்ற மண்டபத்தருகே மேட்டழகிய சிங்கர் சன்னதி உள்ளது. கம்பர் தன் கவியில் நரசிம்மாவதாரம் பற்றி பாடிய பகுதி, ராமாயணத்தில் உள்ளது அல்ல. ஆதலால் ஏற்புடையதல்ல என்று அறிஞர்கள் சொல்ல, கம்பர் இந்த நரசிம்மர் முன், இந்த துதிகளைச் சொல்ல, அவற்றை ஆமோதிப்பது போல, கர்ஜனை செய்தார். அதனால் நரசிங்கா என்று அமைத்துள்ளேன்.

கவிரா யருக்கன் றருள்செய்தோய் - கவிராயருக்கு அன்று அருள்செய்தோய்..
கம்பு - சங்கு

1 comment: