Tuesday 31 October 2017

18. வண்ணப் பாடல் - 01 - நரமுக கணபதி - திருச்சி

திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில் கீழரன் சாலையிலுள்ள (East Bouleward Road) நன்றுடையான் கோயிலில் அருள்புரியும் நரமுக கணபதி மேல் ஒரு வண்ணப் பாடல். 

ராகம் - கானடா
தாளம் - ஆதி

சந்தம்:
தனதன தனதன தனதன தனதன 
தனதன தனதன தனதான 

அருமலர் கொடுநிதம் அடிபணி பவரவர்
..அடைதுயர் களையழி அதிதீரா!!
.அறுகுடன் அரிசியும் அவல்பொரி அளியிட
...அறிவெனும் ஒளிதரும் அருளாழீ

நரைவிடை யினிலமர் நிருமல! எழிலொலி
..நதிபுனை சிவனுமை புதல்வோனே!
.நறைமலர் மழுதளை இவையணி கரமுடை
...நரமுக கணபதி அருள்வாயே!!

பரிபுரம் அணிபதம் அதைஎளி யனெனது
..பவமற முடிமிசை இடுவாயோ
.பணையதன் நிழலினை இடமென விழைபவ! 
...பணிதனை அரையினில் அணிவோனே 

திரிசிர கிரியதன் அடியமர் குணபர
..திடமிக வுடைவடி வழகோனே 
.செறிவுடை வயல்நிறை வளவனின் நகருறை
...திருமிக அருளிடும் இறையோனே 

அறுகு - அறுகம் புல்
அளி - தேன்
இடு - இடுதல் / வைத்தல் / அர்ப்பணித்தல்
நரைவிடை... - இந்த நன்றுடையான் கோயில் விநாயகருக்கு நந்தி வாகனம். 
தளை - கயிறு.
இந்த ஆதி விநாயகர், கைகளில் தாமரை, கோடரி, பாசக்கயிறு ஆகியவற்றை வைத்துள்ளார். 
பவம்-பிறப்பு
அற - முற்று பெறுதல் / முழுவதும் ஒழிதல்
முடி - தலை
பணைமரம் - அரசமரம். பொதுவாக பிள்ளையார், அரசமரத்தடியில் விரும்பி அமர்வார். இந்தக் கோயிலிலும் அரசமரம் இருக்கிறது. 
பணி - பாம்பு. நாகாபரணத்தை இடையில் அணிந்துள்ளார். 
சிராப்பள்ளி மலைக்குக் கீழே இந்த  ஆலயம் அமைந்துள்ளது. 
வளவன் - சோழன்



No comments:

Post a Comment