Monday 11 December 2017

23. வண்ணப் பாடல் - 05 - திருவண்ணாமலை


இன்று (02.12.2017) திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா. அண்ணாமலையார் மீது ஒரு வண்ணப் பாடல்.

அடாணா ராகம்
சதுஸ்ர ஜம்பை தாளம் (7) [தகதகிட (2 1/2) + தகிட (1 1/2) + தகதிமிதக (3)]

சந்தக் குழிப்பு:
தனதனன தான தனதான

பெருவினையில் ஊறி நலியாதே
..பிணிமுதுமை ஏதும் அணுகாதே
அரனடியை நாடி மனமார
..அரைநிமிட மேனும் நினைவேனோ
கரியுரிவை பூணும் மறவோனே
..கதியடைய நீயும் அருள்வாயே
எரிவடிவ மான இறையோனே
..எழிலருணை மேவு பெருமானே

நலிதல் - தேய்தல் / அழிதல்
உரிவை - தோல்
மறவன் - வீரன்
எரி - நெருப்பு

குறிப்பு - இங்கு அணுகாதே, நலியாதே ஆகிய இடங்கள், அணுகாமலும், நலியாமலும் என்ற பொருளில் வருகின்றன. அதாவது, வினையில் நாம் ஊறி நலியாமலும், பிணி, முதுமை போன்ற அவஸ்தைகள் நம்மை அணுகாமலும் இருக்க அரனின் தாளை நாடி, மனமார அவரை ஒரு அரை நாழியாவது நினைக்க மாட்டோமா எனுமாறு....

அண்ணாமலையானுக்கு அரோஹரா

சரண்யா.



No comments:

Post a Comment