Thursday 4 January 2018

24. திருவானைக்கா (பதிகம் 10)

ஆனைக்கா அண்ணல் மீது மற்றொரு பதிகம். முன்னர் எழுதிய பதிகத்தில், கூறப்படாத தல சிறப்புகள் சிலவற்றை இதில் சேர்த்துள்ளேன்.

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.

காய் காய் காய் காய்.

வெண்ணாவல் கீழமரும் வேதத்தின் மெய்ப்பொருளைப்
பண்ணாரும் பரமனைத்தென் ஆனைக்கா உறைவானைப்
பெண்ணாரும் மேனியனைப் பிறைமௌலிப் பெம்மானைக்
கண்ணாரும் நுதலானைக் கண்ணாரக் கண்டேனே. 1

  • வெண்ணாவல் - திருவானைக்கா ஸ்தல வ்ருக்ஷம் - வெள்ளை நாவல். 
  • பண்ணாரும் பரமன் - இசையால் சூழப்பட்டவன் அல்லது பண்கள் யாவும் புகழ்ந்து அனுபவிக்கும் பரமன்.


வண்டினமும் மயிலினமும் வந்தமரும் சோலையினில்
எண்டிசையோர் நின்றேத்த இனிதாக அமர்ந்தானைக்
கண்டமதில் ஆலாலம் கருநாகம் அணிவானை
அண்டமெங்கும் நிறைவானை ஆனைக்காக் கண்டேனே. 2

சோழனது முத்துவடம் ஏற்றானைச் சுந்தரனின்
தோழனுமாய்த் தூதனுமாய் ஆனானைத் துதிசெய்த
வேழமதற்க் கருளியநல் வித்தகனைத் திருமாலுக்(கு)
ஆழியுகந் தளித்தானை ஆனைக்காக் கண்டேனே. 3


  • சோழ மன்னன், காவிரியில் நீராடிய போது, அவனது முத்து மாலை நழுவி, ஆற்றில் வீழ்ந்தது. வீழ்ந்த கணத்தில், அம்மன்னன், "இறைவா, நீயே ஏற்றுக்கொள்வாயாக" என்று சம்புகேசரை வேண்ட, அடுத்த நாள், திருமஞ்சனக் குடத்தில் அந்த ஆரம் இருந்தது.

செங்கண்ணன் கட்டியதோர் சீர்மாடம் அமர்ந்தானை
வெங்கண்மாத் தோலினைத்தன் மேனியின்மேல் அணிவானை
நங்கண்முன் நிறைவானை நால்வேதம் புகழ்வானை
அங்கண்மூன் றுடையானை ஆனைக்காக் கண்டனே. 4

  • செங்கண்ணன் - செங்கட் சோழன். (முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து ஜம்புகேஸ்வரரை பூஜை செய்ததன் பயனாய் அடுத்த பிறவியில் சோழ மன்னனாக பிறந்து, (முற்பிறவியில் யானையிடம் கொண்ட வெறுப்புத் தொடரவே இப்பிறவியிலும்) யானைகள் நுழைய முடியாத மாடக் கோயில்கள் 72 ஐக் காவிரி ஆற்றின் கரையில் கட்டினான். திருச்சி உறையூர், சுவாமிமலை, திருநறையூர் சித்தீச்சரம், அழகாப்புத்தூர், திருப்பேணுப்பெருந்துறை (கும்பகோணம் அருகில் உள்ளவை) போன்றவை.
  • வெங்கண்மா - கோபம் கொண்ட கண்கள் உடைய யானை. (அட்ட வீரட்டச் செயல்களில் ஒன்று)
  • நங்கண் - நம் கண்
  • அங்கண் - அம் கண் - அழகிய கண்


ஊதியமாய்த் திருநீற்றைத் தந்தெயிலொன் றமைத்தானை
வேதியனை வேண்டுபவர்க் கருள்வோனை மின்னொளிரும்
சோதியனைத் தூயவனைத் துயரறுக்கும் நாயகனை
ஆதியந்தம் ஆனவனை ஆனைக்காக் கண்டேனே. 5


  • திருநீற்றுப் பிரகாரம் (விபூதி பிரகாரம்) உண்டான சம்பவம். 
  • ஆதியந்தம் ஆனவனை - தோற்றமும் முடிவும் சிவனே.


பந்தற்செய் சிலம்பியினைப் பாராளச் செய்தானைச்
செந்தீயாய் நிமிர்ந்தானைச் சேர்ந்தறியாக் கையானை
வெந்தீயைக் கையேந்தி வெங்காட்டில் விளையாடும்
அந்தண்பூம் புனலானை ஆனைக்காக் கண்டேனே. 6

  • சிலம்பி - சிலந்தி 
  • வலை அமைத்து வணங்கிய சிலந்தி, அடுத்த பிறவியில் செங்கட் சோழனாய், ஆனைக்காவில் பிறந்தார். யானைகள் நுழையமுடியா மாடக் கோயிலைக் கட்டினார்.
  • சேர்ந்தறியாக் கையன் - கூப்பிய கைகள் இல்லாதவன். நமக்கு ஏதாவது வேண்டுமென்றாலோ அல்லது நம்மைவிட பெரியவரைப் பார்த்தாலோ நாம் கைகளைக் கூப்பி வணங்குவோம். ஆனால் இறைவனிடம் எல்லாம் இருக்கிறது. அவருக்கு வேண்டுவது என்று எதுவும் இல்லை. மேலும் இறைவனே பெரியவன். அவரைவிடப் பெரியவன் வேறு யாரும் இல்லை. ஆதலால் அவர் கைகளைக் கூப்ப வேண்டியது இல்லை. அவர் கைகள் சேர்ந்து இருக்காது. சேர்ந்தறியாக் கையானை என்று மாணிக்கவாசக பெருமான், திரு அம்மானையில் பாடியுள்ளார்.
  • வெங்காடு - இடுகாடு
  • அந்தண்பூம் புனல் - அம் (அழகிய) தண் (குளிர்ந்த) பூம் புணல் (பூப் போல் வாசம் மிகுந்த நீர் - அப்பு லிங்கம்)

பிரமனது பாவத்தைப் போக்கியநற் பெரியோனை
அரவமுடன் அருமலர்கள் பலவணியும் அழகோனைத்
திருவருளைத் தருவோனைத் தென்னானைக் காவானைக்
கருமேக மிடறோனைக் கண்ணாரக் கண்டேனே. 7


  • திலோத்தமையின் அழகில் ஒரு கணம் மனத்தை இழந்த பிரமனுக்கு ஸ்த்ரீ தோஷம் உண்டானது. அதிலிருந்து விடுவிக்கும் பொருட்டு, இத்தலத்தில், அன்னை ஐயனாகவும், ஐயன் அன்னையாகவும் வேடமிட்டு, பிரம்மா முன் சென்றனர். பெண் உருவத்தில் ஐயனைக் கண்ட பிரமன், தோஷத்திலிருந்து விடுபெற்றார்.


மறையாரும் பெரியானை வானதியை முடிந்தானை
நறையூறும் தாள்தூக்கி நடமாடும் வல்லானைச்
சிறையென்றும் நிறைந்தூறும் திருவானைக் காவுறையும்
கறைசேரும் கழுத்தானைக் கண்ணாரக் கண்டேனே. 8

  • மறை - வேதம்; ஆர்தல் - அனுபவிக்கும்
    • வேதம் யாவும் அனுபவிக்கும் பெரியவனை
  • வானதி - வானிலிருந்து தோன்றிய நதி - கங்கை. சத்ய லோகத்தில் இருக்கும் பிரமனின் கமண்டல நீரே கங்கை.
    • முடிதல் - அணிதல்
    • கங்கையை தலையில் அணிந்தானை. 
  • நறை - தேன். 
    • தேன் ஊறும் இனிய காலைத் தூக்கி நடனம் ஆடும் வல்லவனை
    • (மலர்களால் அடியார்கள் சிவனை பூஜிப்பதால், அம்மலர்கள் அவன் பாதத்தில் சேர்கிறது. அதனால் அம்மலர்களின் தேன், சிவன் காலடியில் ஊறுகிறது)
  • சிறை - நீர்நிலை. ஆனைக்காவில் ஜம்புநாதருக்குக் கீழே எப்போதும் ஊற்று ஒன்று, ஊறிக்கொண்டே இருக்கும்.
    • நீர் நிலைகள் என்றும் ஊறும் (வற்றாத) திருவானைக்காவில் உறையும் கறை படிந்த (விடமுள்ளதால்) கழுத்துடையவனைக் கண்ணாரக் கண்டேனே

புனலாரும் சடையானைப் புறத்தார்க்குச் சேயோனைக்
கனலேந்தும் கரத்தானைக் கைத்தூக்கி ஆள்வானை
மனதாரத் துதிப்போர்க்கு வரம்வாரிப் பொழிவானை
அனலாகி எழுந்தானை ஆனைக்காக் கண்டேனே. 9


  • புறத்தார்க்குச் சேயோன் - மாறுபட்ட கருத்து உடையோர்க்கு (வேதத்தை மதிக்காதோர்) எட்டாதவன்.
  • கைத்தூக்கி ஆள்வான் - அபயம் அளிப்பவன் (அபய ஹஸ்தம் தூக்கிய நிலையில் இருக்கும்) அல்லது நமது கையைப் பிடித்து சம்ஸார சாகரத்திலிருந்து நம்மைத் தூக்கி ஆள்பவன்


மும்மூன்று துளைமுன்நின் றேத்திடுவார்க் கருள்வானை
ஐம்மூன்று விழியானை அகிலாண்ட நாயகிக்குச்
செம்மூன்று விரல்தூக்கிச் சிவஞானம் தந்தானை
ஐம்பூதம் ஆனோனை ஆனைக்காக் கண்டேனே. 10
  • மும்மூன்று - ஒன்பது துளைகள் உள்ள சாளரம் வழியாக இறைவனைப் பார்ப்பது மிகவும் விசேஷம்.
  • ஐம்மூன்று - ஐம்முகம் உடைவர். ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள். ஆக 15 கண்கள். ஆனைக்கா கோவிலுக்கு அருகில் பஞ்ச முக லிங்கம் (இராஜேஸ்வரம் என்று அந்தக் கோவிலுக்குப் பெயர்).


ஆனைக்கா அண்ணலின் அருள் வேண்டி...

பணிவுடன்,
சரண்யா.

No comments:

Post a Comment