Tuesday 30 January 2018

26. திருமூக்கீச்சரம் (உறையூர்) (பதிகம் 12)

வணக்கம்.

அடுத்த பதிகம் - திருமூக்கீச்சரம் (உறையூர்)

எண்சீர் விருத்தம்.

வாய்பாடு - காய் காய் மா தேமா (அரையடி)

சேவேந்தும் சேவடியை உடையாய் போற்றி
..செல்வங்கள் தனபதிக்குத் தந்தாய் போற்றி
நாவேந்தும் நாமங்கள் கொண்டாய் போற்றி
..நன்மைபல எமக்கென்றும் தருவாய் போற்றி
மூவேந்தர் பூசித்த முதல்வா போற்றி
..மோனத்தில் ஆழ்ந்திருக்கும் குருவே போற்றி
தேவேந்தி ரன்போற்றும் திருவே போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 1

குறிப்புகள்:
சேவேந்தும் சேவடி:
சே - நந்தி / ரிஷபம். பிரதோஷ காலத்தில் நந்தியின் தலைமேல் கொம்பிற்கு இடையில் நின்று ஆடுகிறார் சிவன் என்பது ஐதீகம். மேலும் அதிகார நந்தி உற்சவத்தில் நந்தி, தன் இருகரங்களால் இறைவனின் திருவடிகளைத் தாங்குவார்.

அதனால் சேவேந்தும் சேவடியை உடையாய் என்று பாடியுள்ளேன்.

தனபதி - குபேரன் (இந்தப் பதிகம் அக்ஷய திரிதியை அன்று தொடங்கினேன்)

நாவேந்தும் நாமங்கள் - நமது நா உச்சரிக்கும் நாமங்கள்

மூவேந்தர் - சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆராதிக்கும் பெருமான், உறையூர் பஞ்சவர்ண சுவாமி.

திருமூக்கீ்ச்சரம் - இன்றைய நாளில் உறையூர் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் - ஸ்ரீ பஞ்சவர்ண சுவாமி. இறைவி - காந்திமதி அம்மை. செங்கட் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட மாடக்கோயில்களுள் ஒன்று. யானைகள் நுழைய முடியாத சிறு வாயில் உள்ளதால் மூக்கீச்சரம் என்று திருமுறைகள் கூறுகின்றன.

தசமுகனின் செருக்கறுத்த சதுரா போற்றி
..தலையோட்டில் பலிதேரும் தலைவா போற்றி
விசயனுக்குப் பாசுபதம் அளித்தாய் போற்றி
..வெள்விடைமேல் வருகின்ற விமலா போற்றி
முசுகுந்தன் துதிசெய்த விடங்கா போற்றி
..முத்தமிழில் மகிழ்ந்திடுமெம் முத்தே போற்றி
திசையெண்மர் பணிந்தேத்தும் தேவே போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 2

முசுகுந்தன் பூஜை செய்த 7 சோமாஸ்கந்த விக்ரகங்கள் சப்த விடங்கத் தலங்களில் உள்ளன. அதனால் விடங்கா என்ற விளியைப் பயன்படுத்தியுள்ளேன்

மங்கைக்கோர் கூறளித்த மன்னா போற்றி
..மதுமல்கு மலரணியும் பெம்மான் போற்றி
கங்கைக்குச் சடையிலிடம் தந்தாய் போற்றி
..காவிரியின் தென்கரையில் அமர்ந்தாய் போற்றி
அங்கண்ணாள் காந்திமதி நாதா போற்றி
..அம்பலத்தில் ஆடிடுமெம் அரசே போற்றி
செங்கண்ணன் செய்மாடத் துறைவோய் போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 3

காந்திமதி - உறையூரில் அம்பாளின் பெயர் காந்திமதி.
உறையூர், செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்.

பத்திக்குப் பரிந்திடும்சிற் பரனே போற்றி
..பண்ணிசையில் உறைகின்ற பதியே போற்றி
எத்திக்கும் நின்றேத்தும் எழிலே போற்றி
..இடபத்தின் மேலேறும் இறையே போற்றி
முத்திக்கு வழிசெய்யும் வித்தே போற்றி
..முன்நடுபின் இல்லாத மூலா போற்றி
தித்திக்கும் தமிழ்க்கடலில் திளைப்பாய் போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 4

கரியுரியைத் தரித்திடும்மா தேவா போற்றி
..கையினில்தீ ஏந்திநடம் புரிவோய் போற்றி
அரிஅயனும் காணாத சோதீ போற்றி
..அடிபணிவார்க் கருளிடும்அற் புதமே போற்றி
நரியையுயர் பரியாகச் செய்தாய் போற்றி
..நாடகங்கள் பலசெய்த நம்பா போற்றி
திரிபுரத்தைச் சிரிப்பாலே எரித்தாய் போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 5

உயர் பரி - உயர்ரகக் குதிரை

மறைநான்கும் புகழ்ந்தேத்தும் மணியே போற்றி
..மருள்நீக்கி ஆட்கொள்ளும் ஒளியே போற்றி
குறையேதும் இல்லாத கோவே போற்றி
..குற்றங்கள் பொறுத்திடும்சற் குருவே போற்றி
பிறைமதியைச் சடைமுடியில் முடிந்தோய் போற்றி
..பேதையென்றன் உளம்கவரும் கள்வா போற்றி
சிறைவண்டார் மலர்சூடும் சீலா போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 6

சிறை - அழகு

புகழ்ச்சோழன் பூசனைசெய் பொலிவே போற்றி
..புண்ணியம்செய் அடியார்தம் புகலே போற்றி
இகழ்ந்தாரைத் தண்டிக்கும் அரனே போற்றி
..எளியாருக் கெளிதான ஈசா போற்றி
நிகழ்ந்தேறும் அனைத்திற்கும் சாட்சீ போற்றி
..நினைத்தெழுவார் இடர்களையும் நிமலா போற்றி
திகழ்ந்தோங்கி ஒளிவீசும் சுடரே போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 7

புகழ்சோழன் அவதார தலம் - உறையூர்
புகல் - துணை
நினைத்தெழுவார் - நினைத்து எழுவார்

நறையாரும் மலர்ப்பாத நம்பா போற்றி
..நள்ளிருளில் நடமாடும் நாதா போற்றி
மறிமழுவைக் கையேந்தும் பதியே போற்றி
..மாறனது சபைவந்த அம்மான் போற்றி
நிறமைந்தாய் உதங்கர்முன் நின்றாய் போற்றி
..நினைவினிலே நிலவுகின்ற நிறைவே போற்றி
சிறியேனை ஆட்கொள்ளும் செல்வா போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 8

மாறன் - பாண்டியன்
அம்மான் - பாண்டியனின் சபைக்கு ஒரு வணிகனின் மாமனாக வந்து சிவபெருமான் வாதம் செய்தார்.

உதங்க மகரிஷிக்கு ஐந்து நிறங்களில் இந்தக்கோவிலில் சிவபெருமான் காட்சி தந்தார்

தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தாய் போற்றி
..சலந்தரனை மாய்த்திட்ட சதுரா போற்றி
துக்கத்தைத் துடைத்தருளும் தூயா போற்றி
..சுடராழி மாலுக்குத் தந்தாய் போற்றி
கொக்கின்வெண் சிறகணியும் கோவே போற்றி
..கொடியின்மேல் இடபத்தைக் கொண்டாய் போற்றி
சிக்கல்கள் தீர்த்திடுமெம் ஐயா போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 9

அன்னவத்தே எழுவிடத்தை நுகர்ந்தோய் போற்றி
..ஆறங்கம் அருமறையின் கருவே போற்றி
இன்னிசையுள் உறைகின்ற சுவையே போற்றி
..ஈறில்லாப் பெருமையுடை எம்மான் போற்றி
பொன்னவையில் நடமாடும் புனிதா போற்றி
..புலித்தோலை அரையிலணி பரனே போற்றி
தென்னனுடல் வெப்பொழித்த தீரா போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 10

அன்னவம் - கடல்
தென்னன் - பாண்டியன்

பதிகம் நிறைவுற்றது.

சரண்யா 

No comments:

Post a Comment