Friday 30 March 2018

34. திருப்பராய்த்துறை (பதிகம் 14)

பல்வகை வெண்பாக்கள்.

அலையார் நதிசூடும் அண்ணலை; என்றும்
நிலையாய் இருக்கும் நிறைவைக்; - கலையார்
அராவணி கண்டனை; அண்டம் பணியும்
பராய்த்துறை நாதனைப் பாடு. 1

கலை - ஒளி / அழகு
நிறைவு - அனைத்திற்கும் எல்லையாக (முடிவாக) இருப்பவர்

தோடணி ஈசனைத் தூமலர்க் கொன்றையைச்
சூடிடும் தேசனைச் சோதிப் பிழம்பாக
நீடுயர்ந்(து) ஓங்கு நியரைப் பராய்மரக்
காடுறை கள்வனைக் காண். 2

நீடு - என்றும் நிலையாய் இருப்பது
உயர்ந்து - அளவில் வளர்ந்து வருவது
ஓங்கு - எல்லா இடங்களிலும் பரவுவது
நியர் - ஒளி

நீடுயர்ந்(து) ஓங்கு நியரைை -
என்றும் நிலையாய் இருந்து, வளர்ந்து, பரவும் ஒளியை

பிறையை அணிந்திடும் பிஞ்ஞகனை எங்கும்
உறைவோனை வெள்விடைமேல் ஊர்வோனை வேதம்
பறையும் பொழில்சூழ் பராய்த்துறை தன்னில்
நிறையும் பதியை நினை. 3

கழலும் சடைமுடியும் காண முயன்ற
அழகன் அயனிடையே நின்ற அழலைப்
பழவினை தீர்க்கும் பராய்த்துறை தேவைத்
தொழுதிடச் சேரும் சுகம். 4

கழல் - திருவடி
அழகன் - திருமால்
அழல் - தீ

கருப்புவில் ஏந்திய காமனைக் காய்ந்த
நெருப்பனைத் தொண்டர்க்கு நேயனை மேரு
பருப்பதவில் ஏந்தும் பராய்த்துறை யானை
விருப்புடனே என்றும் விழை. 5

விழைதல் - மதித்தல்

சித்தியைத் தந்திடும் தேவாதி தேவனைப்
புத்தியுள் நின்றொளிர் புண்ணிய மூர்த்தியைப்
பத்தர்க் கருள்செய் பராய்த்துறை நாதனை
நித்தமும் நெஞ்சில் நிறுத்து. 6

கயிலை மலையானைக் காரிருளில் நட்டம்
பயிலும் நிருத்தனைப் பாவை பசும்பொன்
மயிலாள் மருவும் பராய்த்துறை யானை
அயிலேந்தும் கோவை அடை. 7

பசும்பொன் மயிலாம்பிகை - திருப்பராய்த்துறை அம்பாள் பெயர்.
அயில் - சூலம்.

வெண்ணிலவைச் சூடும் விமலனை வேயமுதைப்
பெண்ணுறையும் தேகனைப் பெற்றமுவந் தூர்வானைப்
பண்ணிசை போற்றும் பராய்த்துறை நாதனை
எண்ணிடுவார்க்(கு) ஏற்றம் எளிது. 8

பெற்றமுவந் தூர்வானை - பெற்றம் உவந்து ஊர்வானை
பெற்றம் - எருது

கோதிலாக் கோமானைக் கூற்றுதைத்த தீரனைச்
சூதம் அறுப்பானைச் சுந்தரத் தேமலர்ப்
பாதனைச் சான்றோர் பறையும் பராய்த்துறை
நாதனை நம்புதல் நன்று. 9

சூதம் - பிறப்பு

தாயிற் சிறந்த தயாபரனைத் தத்தளிக்கும்
சேயனெனைக் காப்பவனைச் சீர்புனல் காவிரி
பாயும் எழிலார் பராய்த்துறை மேவிய
மாயனை நாவார வாழ்த்து. 10

சரண்யா

1 comment:

  1. அன்பு சகோதரி சரண்யா அவர்களே தாங்கள்
    சகல சம்பத்துக்களும், செளபாக்கியமும், சந்த்தானமும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், நிலமும், நீங்காப்புகழும், குருவருளும் திருவருளும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய சிவாயநம ஓம்

    ReplyDelete